கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி-கிலோ ரூ.8-க்கு விற்பனை

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.8-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.

Update: 2023-09-27 19:00 GMT


கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.8-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.


12 டன் தக்காளிகள்


கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிக அளவு தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு கிணத்துக்கடவு பகுதிகளில் பருவமழை சரிவரப் பெய்யாததால் கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி வரத்து தாமதமாக தொடங்கியுள்ளது. தற்போது கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வர தொடங்கியுள்ளது. கடந்த வாரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய் 25 காசுக்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு 12 டன் தக்காளிகளை கிராமப் பகுதியில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.


3 ரூபாய் வீழ்ச்சி


நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்ச விலையாக 8 ரூபாய் 60 காசுக்கு விற்பனை ஆனது. இது கடந்த வாரத்தை விட கிலோவிற்கு 3 ரூபாய் 65 காசு குறைவாகும். தொடர்ந்து தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


விலை நிர்ணயம்


இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- தமிழகத்தில் பல மாவட்டங்களில் தக்காளி உற்பத்தி இருப்பதால் தற்போது கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டும் தக்காளி விவசாயத்தில் கடும் நஷ்டம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். தக்காளி விலை வீழ்ச்சி ஆவதை தடுக்க தமிழக அரசு தக்காளிக்கு என ஒரு நிரந்தர விலையை நிர்ணயம் செய்தால் நஷ்டம் ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்