கூடுதல் பஸ் இயக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவ-மாணவிகள்- சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கூடுதல் பஸ் இயக்கக்கோரி அரசு பஸ்சை மாணவ-மாணவிகள் சிறைபிடித்தனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கிணத்துக்கடவு
கூடுதல் பஸ் இயக்கக்கோரி அரசு பஸ்சை மாணவ-மாணவிகள் சிறைபிடித்தனர். மேலும் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு பஸ் மட்டும் இயக்கம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாமரைக்குளம், நல்லட்டிபாளையம், பட்டணம், எம்மேகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல கிராமப் பகுதியில் இருந்து மாணவர்கள் பெரும்பாலானோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்ல கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கிணத்துக்கடவிலிருந்து ஒரு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் இயக்கப்பட்டு வந்தது.
தற்போது அந்த தனியார் பஸ் கொரோனா தொற்று அதிகமான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் சேரி பாளையம் பள்ளிக்கு செல்லும் நேரத்திற்கு தற்போது ஒரே ஒரு அரசு பஸ் மட்டும் கிணத்துக்கடவிலிருந்து இயக்கப்படுகிறது.
ஆபத்தான பயணம்
இந்த பஸ்சில் சேரி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினசரி காலையில் 150-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் உள்ள தென்னை நார் மற்றும் தேங்காய் உரிக்கும் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களும் இதே பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.
காலையில் 8.15 மணிக்கு கிணத்துக்கிடவிலிருந்து சேரிபாளையத்திற்கு நல்லட்டி பாளையம் வழியாக ஒரே ஒரு பஸ் மட்டும் செல்வதால் எப்போதும் கடும் கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் மாணவ-மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்து சேரி பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று படித்து வந்தனர்.
அரசு பஸ் சிறைபிடிப்பு
மாணவர்கள் பொதுமக்கள் கிணத்துக்கிடவிலிருந்து தாமரைக்குளம், நல்லட்டிப்பாளையம் வழியாக 8.45 மணிக்கு பட்டணம் வந்த அரசு பஸ்சை பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் சிறை பிடித்தனர். மேலும் அவர்களை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக டெப்போவிற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு வந்தனர். இதையடுத்து நல்லட்டி பாளையம் ஊராட்சி மன்றம் சார்பில் மாணவ -மாணவிகள், தொழிலாளர்கள் செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவ-மாணவிகளின் இந்த போராட்டத்தால் 30 நிமிடம் நல்லட்டிப்பாளையம்- பட்டணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.