புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி

Update: 2023-01-25 16:33 GMT


நத்தக்காடையூர் அருகே செங்குளம் - பழையகோட்டையில் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

புனித செபஸ்தியார் ஆலயம்

நத்தக்காடையூர் அருகே உள்ள செங்குளம் பழையகோட்டையில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 20-ந் தேதி காலை 7 மணிக்கு ஆலய வளாகத்தில் திருப்பலியுடன் கொடியேற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு ஆடம்பர கூட்டு பாடல் திருப்பலி, வேண்டுதல் தேர் நிகழ்ச்சி மற்றும் மதியம் 12.30 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு வாழை மரங்கள் கட்டப்பட்ட டிராக்டரில் மின்விளக்குகளால் சிலுவையுடன் கிரீட வடிவில் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார் தேர்பவனி ஊர்வலம் வாணவேடிக்கையுடன் தொடங்கியது.

ஆடம்பர தேர்பவனி

இந்த தேர் பவனியில் குழந்தைகள் மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றி கைகளில் ஏந்திய படியும், கிறிஸ்தவர்கள் ஜெபித்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் தேரில் இருந்த புனித செபஸ்தியார் சொரூபத்திற்கு மிளகு, உப்பு, பொட்டுக்கடலை, பூமாலை ஆகியவை வீசப்பட்டன. இந்த தேர் பவனி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, செங்குளம் பழையகோட்டை பஸ் நிறுத்தம் வரை சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நன்றி திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

இதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட பங்கு தந்தை மக்கள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பழையகோட்டை பங்கு தந்தை, பங்கு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்