டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது
வளையப்பட்டியில் டீக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மோகனூர்
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியை சேர்ந்த திருமலை என்பவரது மகன் பாரத் (வயது 23). இவர் வளையப்பட்டியில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி வளையப்பட்டி அருகில் உள்ள ரெட்டையாம்பட்டியில் மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. அந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவர்கள் மண்டல பூஜை அன்னதானம் செய்தனர். அப்போது வளையப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பரிமாறுபவர்களிடம் தகராறு செய்ததாகவும், அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் டீக்கடையில் இருந்த பாரத்திடம், வளையப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள், டீக்கடை முன்பு வந்து பாரத்தை பார்த்து தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டினர். மேலும் அவர்கள் பாரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து பாரத் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுத்தார். இதன்பேரில் மோகனூர் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி வழக்குப்பதிவு செய்து வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த ரவிக்குமார் (23), நந்தகுமார் (22) உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.