திருவையாறு காவிரியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர்

திருவையாறு காவிரியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர்

Update: 2022-09-25 20:21 GMT

மகாளய அமாவாசையையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசை

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மகாளய பட்சம் என்று அழைக்கிறோம். நேற்று புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்யமண்டப காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு அங்குள்ள புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் காவிரியில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

அதனை தொடர்ந்து ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் காவிரி படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது சாமிக்கு மஞ்சள், பால் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் நான்கு வீதிகளிலும் வலம்வந்து கோவிலை சென்றடைந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்