டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்ட முகவரியில் குழப்பம்: தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செஞ்சியில் பரபரப்பு

செஞ்சியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்ட முகவரியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தேர்வு மையத்துக்கு தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மறுத்த அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-21 17:10 GMT

செஞ்சி,

தமிழகத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் 8 தேர்வு மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது. இதனிடையே செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள தேர்வு மையமான சாணக்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் குரூப்-2 தேர்வு நடைபெற்றது.

இந்த மையத்தில் தேர்வெழுதும் தேர்வர்களின் ஹால்டிக்கெட்( தேர்வறை நுழைவுச் சீட்டு) முகவரியில் செஞ்சி என குறிப்பிடாமல் திண்டிவனம் சாலை என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தது.

ஒரே பெயரில் இருந்த பள்ளிகள்

இதனால், இந்த மையத்துக்கு தேர்வு எழுத வந்தவர்களில் சிலர், திண்டிவனத்தில் உள்ள சாணக்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அப்போது தான் அந்த பள்ளி தேர்வு மையமாக செயல்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் பதறிபோனார்கள்.

அதன் பின்னர் தான் அவர்களுக்கு, செஞ்சியில் திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள சாணக்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தான் தங்களுக்கான தேர்வு மையம் என்பது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டு செஞ்சிக்கு வந்தனர்.

அனுமதி மறுப்பு

ஆனால், அவர்களால் அங்கு 9.30 மணிக்கு தான் வர முடிந்தது. இதனால் 18 பெண்கள் உள்பட 26 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் பழனி மற்றும் செஞ்சி போலீசார் அங்கு வந்து, தே்ாவு மைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் ஒருமணிநேரம் தாமதமாக அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தெளிவாக இருக்க வேண்டும்

ஹால்டிக்கெட்டில் தேர்வு மையம் எங்கு அமைந்துள்ளது என்பதை சரியாக குறிப்பிடாமல், இருந்ததே இந்த குழப்பத்துக்கு காரணமாக அமைந்தது. இதேபோன்று பலருக்கும் தேர்வு மையம் அமைந்து இருக்கும் ஊரின் பெயரை குறிப்படாமல், அந்தப பகுதியில் அமைந்துள்ள சாலையை குறிப்பிட்டு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. இதுவே தேர்வர்கள் இடையே குழப்பத்துக்கு வழிவகுத்ததாக அமைந்துவிட்டது.

எனவே இனி இ துபோன்று தவறுகள் நடைபெறாமல், இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் தரப்பில் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்