நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-10 12:03 GMT

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

நியாயவிலைக்கடைகளில் அதிகாரிகள் நடத்தும் சோதனைகளின் போது ஏற்படும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவுக்காக, சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை அரசு இருமடங்காக உயர்த்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடையின் அளவு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி பலமுறை அளிக்கப்பட்ட புகார்மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தற்போது அபராதத் தொகையை உயர்த்தி புகார் அளித்த ஊழியர்கள் மீதே கூடுதல் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவால் விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரித்திருப்பதால், தங்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை அபராதத்திற்கே சென்றுவிடும் சூழல் உருவாகியிருப்பதாகவும், தமிழக அரசின் இந்த புதிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, நியாயவிலைக்கடை ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, கிடங்குகளில் இருந்து நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்