தக்காளி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Update: 2023-03-30 19:00 GMT

காரிமங்கலம்:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தர்மபுரி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் காமலாபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி தலைமை தாங்கி காய்கறிகள் சாகுபடியின்போது இயற்கையான இடுபொருட்களை பயன்படுத்தி நஞ்சு இல்லாத உணவுப் பொருட்களை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்.

வேளாண் பல்கலைக்கழக பயிற்சி துறை தலைவர் ஆனந்தராஜா வரவேற்றார். வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் குணசேகரன் வயலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைக்கும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், உழவர் பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். வேளாண்மை பல்கலைக்கழக பூச்சி இயல் துறை இணை பேராசிரியர் சண்முகம் தக்காளியில் ஒட்டு கட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாக்டீரியா பாதிப்பு நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினார். நோயியல் துறை பேராசிரியர் தெய்வமணி தக்காளியில் தோன்றும் நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தக்காளி சாகுபடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்