அரக்கோணத்தில் இருந்து சென்னை வந்த போது சோகம்: கார் - வேன் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி - 16 பேர் காயம்

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இரவு பிரியாணி சாப்பிட காரில் வந்த போது ஏற்பட்ட விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Update: 2023-04-15 09:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சோளிங்கர் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 28). இவர் அரக்கோணத்தை சேர்ந்த தனது நண்பர்களான யாமனத் (29), அஸ்வின் ராஜ் (25), பாலாஜி பிரசாந்த் (26), மதன் (26) ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்புக்கு ஒரு காரில் புறப்பட்டு வந்தனர். அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற வேன் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரும், வேனும் நொறுங்கி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறி கூச்சலிட்டனர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக மப்பேடு போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அஸ்வின்ராஜ், பாலாஜி பிரசாந்த், மதன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் காரில் பயணம் செய்த விஷ்ணு பலத்த காயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், யாமனத் என்ற இளைஞர் மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து போலீசார் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை புளியந்தோப்பில் உள்ள பிரியாணி கடைக்கு இரவு பிரியாணி சாப்பிடுவதற்காக காரில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேனில் இருந்த 14 பேருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அவர்கள் 14 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து காரணமாக பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் இரவு 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாமனத் சீனாவில் பொறியியல் படிப்பை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடுவதற்காக இரவு பிரியாணி சாப்பிட காரில் சென்னைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்