செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை

திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை மின்தடை ஏற்பட்டதால் அவலம்

Update: 2023-06-06 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் கிடங்கல்-1, முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவா் அவரது மகன் யோகேஷ்(14) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் குட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு, மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், சுப்பிரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன், யோகேஷ் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது திண்டிவனத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டு ஆஸ்பத்திரியிலும் மின்சாரம் இன்றி நோயாளிகள் இருளிலேயே மூழ்கி கிடந்தனர். இதற்கிடையே விபத்தில் காயம் அடைந்து அவசர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்ட தந்தை, மகன் இருவருக்கும் அவரது உறவினர்கள் தங்கள் செல்போன் விளக்கை ஒளிர விட, அந்த வெளிச்சத்தில் டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தந்தை, மகன் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மின்சார ஜெனரேட்டர் போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து கிடக்கிறது. அதனால் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படும்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதாகவும், எனவே திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பழுதடைந்த ஜெனரேட்டரை சரிசெய்து 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்