மயங்கி விழுந்த யானைக்கு சிகிச்சை.. குணமடைந்ததும் வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு

யானை விரட்டியதால் வனத்துறையினர், தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2024-04-06 02:34 GMT

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே போல் நிலத்தடி நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.

மசினகுடியில் சிங்காரா வனச்சரகத்துக்குட்பட்ட தனியார் பட்டா நிலத்தில் நேற்று காலை 8.30 மணிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. மிகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில் அந்த யானை திடீரென மயங்கி விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிங்காரா வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் ஜான் பீட்டர் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மயங்கி விழுந்த காட்டு யானையை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அப்போது நீர்ச்சத்து குறைவால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் நலன் மிகவும் பாதிக்கப்பட்டு காட்டு யானை மயங்கி விழுந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொண்டனர்.

மேலும் குளுக்கோஸ் உள்ளிட்ட திரவ உணவுகளும் வழங்கப்பட்டது. பின்னர் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து படுத்து கிடந்த காட்டு யானையை வனத்துறையினர் தூக்கி விட்டு எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் காட்டு யானை உடல் சோர்வு நீங்கி பூரண குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. பின்னர் வனத்துறையினர் தூக்கி விட காட்டு யானை எழுந்து நின்றது.

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் காட்டு யானை தனக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரை விரட்ட தொடங்கியது. இதனால் துணை இயக்குனர் அருண்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது தூரம் வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை பின்னர் வனப்பகுதியை நோக்கி வேகமாக சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சுமார் 6 வயதான ஆண் யானை வயிற்றுப்போக்கால் உடல் நலன் குன்றி மயங்கி விழுந்தது. உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததால் காட்டு யானை பூரண குணமடைந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர். காட்டு யானை வனத்துறையினரை விரட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags:    

மேலும் செய்திகள்