கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டாா்.;
கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது. இதற்கு உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மணி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்பட 80 பேர் மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட உதயசூரியன் எம்.எல்.ஏ., மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் 11 பேருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான நகல், 8 பேருக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தனிநபர்கள் விவசாய பயன்பாட்டிற்கு திறந்தவெளி கிணறு வெட்டுவதற்கு தலா ரூ.8 லட்சத்து 58 ஆயிரத்திற்கான பணி ஆணையையும் அவர் வழங்கினார். இதேபோல் ரங்கநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 148 மனுக்களும், அகரக்கோட்டாலும் 200 மனுக்களும் பெறப்பட்டன. இதில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன், வேளாண்மை அதிகாரி அன்பழகன், வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அரவிந்தன், தாசில்தார் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் பிரியா ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரம் ராமச்சந்திரன், துணை தலைவர் மணிவண்ணன், மண்டல துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் ருத்ரகுமார், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.