உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா- கடல் மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

Update: 2022-06-12 22:42 GMT

திசையன்விளை:

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வைகாசி விசாக திருவிழா

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, உதய மார்த்தாண்ட பூஜை நடந்தது. அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் கடலில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கடல் மண்ணை ஓலைப்பெட்டியில் சுமந்து வந்து கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

சுவாமி வீதி உலா

மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது. இரவில் சமய சொற்பொழிவு நடந்தது. செய்க தவம், பாரதம் காட்டும் வாழ்க்கை நெறி, கந்தபுராணம் காட்டும் பக்திநெறி, பெரியபுராணம் காட்டும் பக்தியின் மகிமை போன்ற தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் உரையாற்றினர். தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நள்ளிரவில் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று மகரமீனுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் தேர் கமிட்டி தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், ராஜகோபுர கமிட்டி நிர்வாகிகள் கனகலிங்கம் ராஜாமணி, அழகானந்தம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்