மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.;

Update:2022-07-15 22:03 IST

நகரமன்ற கூட்டம்

விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகரமன்ற கவுன்சிலர்கள் பேசியதாவது:-

இளந்திரையன் (பா.ம.க.):- 37-வது வார்டில் புதியதாக தெரு மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் உள்ள 3 மினி குடிநீர் தொட்டிகளும் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அதை உடனடியாக சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

முன்மாதிரி நகராட்சியாக

புருஷோத்தமன் (தி.மு.க.):- அதிகாரிகளின் செயல், தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை எப்போது முடிப்பீர்கள்? அதிகாரிகள் சிறப்பாக பணி செய்து மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுத்து தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும்.

மெரீனா (வி.சி.க.) :- எனது வார்டுக்குட்பட்ட திருப்புகழ் தெரு, மணிமேகலை தெரு, ஹவுசிங்போர்டு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும்.

சித்திக்அலி (துணைத்தலைவர்) :- அதிகாரிகள் ஆய்வு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கவுன்சிலர்கள், துணைத்தலைவருக்கு முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். ஒப்பந்த பணிகள் குறித்து விரிவாக கவுன்சிலர்களுக்கு நோட்டீசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பணிகள் நிறைவேற்றப்படும்

இதற்கு பதிலளித்து நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி பேசுகையில், குடிநீர் பிரச்சினை, மின்விளக்கு பிரச்சினை, வாய்க்கால் பிரச்சினை இவற்றையெல்லாம் சரிசெய்து தமிழகத்திலேயே முன்மாதிரி நகராட்சியாக விழுப்புரத்தை மாற்றுவதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். அதற்கான பணிகள் இன்னும் முடுக்கி விடப்படும். நான் பெண் தலைவர் என்பதால் என்னை யாரும் மிரட்டி பார்க்க வேண்டாம். பட்டதாரியான நான் ஏற்கனவே, அரசியல் அனுபவம் பெற்றிருக்கிறேன். அனைவரின் ஒத்துழைப்புடன் மக்களுக்கான பணிகள் நிறைவேற்றப்படும் என்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் நந்தா நெடுஞ்செழியன், பத்மநாபன், இம்ரான்கான், நவநீதம்மணிகண்டன், காவ்யா, வித்யாசங்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலக நகரமன்ற கூடத்திற்கு டாக்டர் கருணாநிதி நகரமன்றகூடம் என பெயர் வைக்க அரசுக்கு உரிய கருத்துரு அனுப்புவது உள்ளிட்ட 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்