பண்ருட்டியில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் பண்ருட்டியில் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார்.

Update: 2023-08-28 18:45 GMT

மழை

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தை போல் 100 டிகிரி வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மாலை அல்லது இரவில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இது சற்று ஆறுதலை அளித்து வருகிறது.

இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலூரில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு காலை 6 மணி வரை பெய்தது. சில நேரம் கன மழையாகவும், லேசான சாரல் மழையாகவும் பெய்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

கடலூரில் 20 மில்லி மீட்டர்

இதேபோல் சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வேப்பூர், புவனகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

இருப்பினும் நேற்று காலை 8.30 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 20 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடலூர் மாவட்டத்தில் சராசரியாக 6.07 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

சுவர் இடிந்து விழுந்தது

இதற்கிடையே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மீனா (வயது 65). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பண்ருட்டி அருகே குடுமியான்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தங்கை கமலா (60) வீட்டிற்கு வந்து அங்கு வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பண்ருட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் ஓட்டு வீடு முழுவதும், நனைந்து சுவர்கள் பலவீனமான நிலையில் காணப்பட்டது.

நேற்று காலையில் வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து மீனா மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கமலா காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்