ரெயில்வே பணிகளுக்கு மண் அள்ளிய நிறுவனம் கடத்தலில் ஈடுபட்டதா?

ரெயில்வே பணிகளுக்கு மண் அள்ளிய நிறுவனம் கடத்தலில் ஈடுபட்டதா? அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2022-12-21 19:38 GMT

ரெயில்வே பணிகளுக்கு மண் அள்ளிய நிறுவனம் கடத்தலில் ஈடுபட்டதா? அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ரெயில்வே பணி

நெல்லை மாவடடம் கூனியூரைச் சேர்ந்த ராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாரத் என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை அதிகாரியாக பணியாற்றினேன். கடந்த ஆண்டு எங்கள் நிறுவனத்திற்காக தூத்துக்குடி கூட்டுடன்காடு பள்ளன் கண்மாயில் சரளை மண் அள்ளுவதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி கண்மாயில் இருந்து சரளை மண் அள்ளி, மணியாச்சி-நாகர்கோவில் இடையிலான ரெயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தினோம். இதற்காக கண்மாயில் இருந்து 3 மாதங்கள் மண் அள்ளும் போக்குவரத்து நடந்தன.

லஞ்சம் கொடுக்க மறுப்பு

இதற்கிடையே பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளி விற்பனை செய்ததாக கனிமவள அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பல ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மண் அள்ளப்பட்டதாக அறிக்கை அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் என் மீதும், மற்ற 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து என்னை கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். உண்மையில் மண் அள்ளியதற்காக அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர். ஆனால் நாங்கள் கொடுக்க மறுத்து, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தோம். இதனால் தான் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக மண் அள்ளியதாக எந்த லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. நாங்கள் மண் கடத்தியதாக சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை.

எந்தவித சட்டவிரோத நடவடிக்கைகளிலும் எங்கள் நிறுவனம் ஈடுபடவில்லை.எனவே எங்கள் மீதான பொய் வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்