சம்பளம் கேட்டு மிரட்டியதால் வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம்
சம்பளம் கேட்டு மிரட்டியதால் வடமாநில வாலிபரை அடித்து, வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம் என்று கைதான தந்தை, மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.;
கோவை,
சம்பளம் கேட்டு மிரட்டியதால் வடமாநில வாலிபரை அடித்து, வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம் என்று கைதான தந்தை, மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வடமாநில வாலிபர்
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் முஜாபூர் மாலிக் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (25) என்பவருடன் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரம் தெப்பக்குளம் வீதியில் ஒரு வீட்டின் 3-வது தளத்தில் குடியிருந்து வந்தார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து கோவையை சேர்ந்த நிஜிபுல் சேட் (45) என்பவரிடம் வேலை செய்து வந்தனர்.
முஜாபூர் மாலிக்குக்கு நிஜிபுல் சேட் சம்பளம் வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முஜாபூர் மாலிக் தங்கி இருந்த அறைக்கு நிஜிபுல் சேட் மற்றும் அவருடைய மகன் அனிஷேக் (19) ஆகியோர் சென்றனர்.
அடித்து கொலை
பின்னர் அவர்கள் முஜாபூர் மாலிக்கிடம் சம்பளம் தொடர்பாக பேசியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை-மகன் 2 பேரும் சேர்ந்து முஜாபூர் மாலிக்கை அடித்து கொலை செய்தனர். அப்போது அங்கு இருந்த ஆனந்தகுமார் இதனை தடுக்க வந்தபோது அவரை மிரட்டியதால் பயந்துபோனார். அத்துடன் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
பின்னர் கோவை வந்த ஆனந்தகுமார் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தந்தை-மகனை தேடி வந்தனர். பின்னர் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றோம்
பின்னர் போலீசார் நிஜிபுல் சேட், அனிஷேக் ஆகியோரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது 2 பேரும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், முஜாபூர் மாலிக் எங்களுடைய உறவினர் ஆவார். இதனால் அவரை நாங்கள் நன்றாக கவனித்து வந்தோம். ஆனால் அவர் சம்பளத்தை கேட்டு மிரட்டியதுடன், தகாதவார்த்தைகளால் திட்டினார். எனவே நாங்கள் அவரை அடித்து வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.