கவர்னர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து பின்வாங்க மாட்டோம் - அமைச்சர் ரகுபதி

சகிப்பு தன்மையோடு அனுசரித்து செல்கிற கட்சி தி.மு.க.வை போல இருக்க முடியாது. அதனையும் மீறி உச்சக்கட்டத்திற்கு கவர்னர் செயல்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2023-11-21 00:40 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நிறைவேற்றி அனுப்பிய 5 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளார். 10 மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பியிருந்தார். அதனை சட்டமன்றத்தில் கடந்த 18-ந் தேதி மீண்டும் நிறைவேற்றி அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு கவர்னருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு சில கோப்புகளை அனுப்பி உள்ளோம். எந்தெந்த முன்னாள் அமைச்சர்கள் என்பது தற்போது கூறமுடியாது. அனுமதி கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டியது என்பது கவர்னரின் கடமை. எண்ணிக்கை அடிப்படையில் இத்தனை ஒப்புதல் கொடுக்கப்பட்டது, இத்தனை கொடுக்கப்படவில்லை என சொல்வது அழகல்ல. குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை சி.பி.ஐ.க்கு நாங்கள் தெரிவிப்போம். கவர்னர் கடந்த 13-ந் தேதி ஒப்புதல் அளித்ததை அன்றே சொல்லியிருந்தால், நாங்கள் ஏன் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றப்போகிறோம்?. முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கையில் நீதிமன்றத்தில் வழக்கு செல்கிறபோது, அந்த வழக்கிற்கான முகாந்திரங்களை வலுவாக கொடுக்க வேண்டியுள்ளது. அதனால் பலவீனம் இல்லாமல் வலுவான வழக்குகள் போடுவதற்காக காலக்கெடு எடுக்கிறோம்.

கவர்னர் மீது தொடரப்பட்ட வழக்கில் முன்வைத்த காலை தி.மு.க. என்றைக்கும் பின் வைக்காது. அதனால் பின்வாங்க மாட்டோம். புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரியோடு இணக்கமாக செல்வதாகவும், அதுபோல தமிழகத்தில் கவர்னரும், முதல்-அமைச்சரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என அவர் கூறியதை பற்றி கேட்கிறீர்கள்.

தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்று அங்குள்ள முதல்-மந்திரியுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று சொல்லட்டும். சகிப்பு தன்மையோடு அனுசரித்து செல்கிற கட்சி தி.மு.க.வை போல இருக்க முடியாது. அதனையும் மீறி உச்சக்கட்டத்திற்கு கவர்னர் செயல்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்