கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-06-18 18:45 GMT

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வந்தது. அதிகபட்சமாக 104 டிகிரி வரை சூரியன் சுட்டெரித்தது. ஆனால் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. அதாவது கடலூரில் 94.28 டிகிரி வெயில் பதிவானது. இதனால் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்டு வந்த மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இதற்கிடையில் வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு பெய்தது.

மழை

மதியத்தை தாண்டியும் லேசான மழை பெய்தபடி இருந்தது. சில நேரங்களில் கன மழையும், சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழையாக பெய்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் சாலையோர சிறு வியாபாரிகள் சிரமப்பட்டனர். மழைக்கு சிலர் குடை பிடித்த படியும், நனைந்தும் சென்றதையும் பார்க்க முடிந்தது.

இதேபோல் புவனகிரி, புதுப்பேட்டை, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்