நீயா....நானா? இரண்டு பெண்கள் குடுமிச்சண்டை.

நீயா....நானா? இரண்டு பெண்கள் குடுமிச்சண்டை. இவர்கள் ஒருவரை ஒருவர் எதற்காக தாக்கி கொண்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-10-21 19:15 GMT

கலகலப்பான குடும்பத்தில்...

என்ன நடந்ததோ....

ஏது நடந்ததோ...?

கைகலப்பாக மாறி விட்டது...

என்பது போல்

இரண்டு பெண்களும்....

வரிந்து கட்டிக்கொண்டு

கோர்ட்டு வாசல் அருகே வந்து விட்டனர்...

நீயா...நானா ? என்று

இருவரும் குடுமிச்சண்டை போட்டது

கூட்டத்தையே கூட்டிவிட்டது...

கூடவே நின்று அவர்களை தடுத்துப்பார்த்த போலீஸ்காரர், கடமையை செய்ய முடியாமல் கதி கலங்கி போனார்....

இதனை பார்த்து....பார்த்து பதில்பேச முடியாமல் நின்ற கணவன் தவித்துப்போனார்.

இந்த சம்பவம் நேற்று கோவை கோர்ட்டை ஒட்டி உள்ள பகுதியில் நடந்தது. இதுபற்றி பார்க்கலாம்:-

குடுமி சண்டையாக மாறியது

கோவை கவுண்டம்பாளையம் பாலன் நகரை சேர்ந்தவர் சிந்து (வயது 26). இவர் தனது கணவரான பார்த்திபனுடன் கோவை கோர்ட்டின் பின்பக்க வாசல் அருகே, வீதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் வழக்கு சம்பந்தமாக வந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த அவர்கள் தங்களது வாகனத்தை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு வக்கீலை சந்தித்து பேசினர்.

பின்னர் இருவரும் வீட்டிற்கு கிளம்பலாம் என்று கூறிக்கொண்டே...பார்த்திபன் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றார்...

அப்போது...அங்கு ஆவேசமாக வந்தார் ஒரு பெண்...

பார்த்திபன் ஸ்டார்ட் செய்து கிளம்ப நினைத்த இருசக்கர வாகனத்தின் சாவியை பறித்துக்கொண்டு...அவர்களை அங்கிருந்து போய் விடாமல் தடுத்தாள்...

இதனை சற்றும் எதிர்பார்க்காத பார்த்திபன் கையை பிசைந்தார்...

அதற்குள்..

அந்த பெண்ணுக்கும், பார்த்திபனின் மனைவியான சிந்துவுக்கும் இடையே கைகலப்பு களேபரமானது...

அங்கு வந்த அந்த பெண் கோவை வேடப்பட்டியை சேர்ந்த பார்த்திபனின் முதல் மனைவி உமா (33). என்பது தெரிந்தது. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாட்டால் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

இந்த நிலையில்...உமாவின் நடவடிக்கை பிடிக்காத சிந்து,உமாவை கண்டித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு...குடுமி சண்டையாக மாறியது.

அவர்கள் இருவரும் சினிமா பாணியில் களமிறங்கியது...கடைவீதியில் இருந்த கூட்டத்தையே மிரள வைத்தது. அவர்களது ஆக்ரோஷமான சண்டையை விலக்கு பிடிக்க முடியாமல் தடுமாறிய போலீசாரையும்...தவித்து நின்ற பார்த்திபனையும் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த நிலையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சிலர் அங்கு விரைந்து வந்து அவர்கள் இருவரையும் விலக்கி, சமரசப்படுத்தினர்.

வீடியோ வைரல்

2 பெண்கள் ஒருவருக்கொருவர் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் தாக்குதலில் காயமடைந்த சிந்துவை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சஅளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் உமா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் உமா அளித்த புகாரின் அடிப்படையில் சிந்து மற்றும் பார்த்திபன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் ஒருவரை ஒருவர் எதற்காக தாக்கி கொண்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்