12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி; பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டுள்ளது.

Update: 2021-03-05 07:33 GMT
சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, இன்று கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

"அரசு பள்ளிகளில் ஒப்பந்த, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம். மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி. பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடனை அரசே செலுத்தும். தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும்

அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள். உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை. கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் தமிழக இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். 

தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2ஆவது தலைநகராகத் திருச்சியும், 3ஆவது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தவுடன் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வெற்றிபெறும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு சிப்காட் தொழில் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, நீர் மேலாண்மை, வேளாண்மை, சமூக நீதி, நிர்வாக சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, சிறுபான்மையினர் நலம், உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்