மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரசியல் பாதை தெளிவாக அமைக்கப்பட்டு விட்டது கே.எஸ்.அழகிரி அறிக்கை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரசியல் பாதை தெளிவாக அமைக்கப்பட்டு விட்டது கே.எஸ்.அழகிரி அறிக்கை.

Update: 2021-03-08 21:45 GMT
சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி, ஜீவா ஆகியோர் விரும்பிய சமத்துவ ஆட்சியை நிச்சயம் அமைப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதை வரவேற்கிறேன். தமிழகத்தின் விடியலுக்கான முழக்கமாக 7 உறுதிமொழிகளை அவர் அறிவித்திருக்கிறார். அந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் வருகிற சட்டமன்றத் தேர்தலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரசியல் பாதை தெளிவாக அமைக்கப்பட்டுவிட்டது. குறிக்கோள் அறிவிக்கப்பட்டுவிட்டது. நோக்கம் தெளிவாக இருக்கிறது. செயல்திட்டம் தயாராகிவிட்டது. தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்றுவதற்கு காரணமாக இருக்கிற அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே தமிழக காங்கிரசின் ஒரே நோக்கம், குறிக்கோள்.

அந்த நோக்கத்தை அடைவதற்கு தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் இன்று முதல் கண் துஞ்சாமல், அயராமல் கடமை உணர்வோடு மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுக்கும் மகத்தான லட்சியப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்