ஏற்காடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு: அரசு பெண் ஊழியர் பணி நீக்கம்

ஏற்காடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்ததால் வேளாண்மைத்துறை பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-03-08 23:16 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளராக தற்காலிக பணி அடிப்படையில் பணியாற்றி வந்தவர் திலகவதி. பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இவர், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஏற்காடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அரசு பணியில் உள்ளவர் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட எப்படி விருப்ப மனு அளிக்கலாம்? என்று அரசு ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

பணி நீக்கம்

இது குறித்த தகவல் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராமனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஏற்காடு தொகுதியில் அரசியல் கட்சி சார்பில் திலகவதி போட்டியிட விருப்ப மனு அளித்தது உண்மையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் விருப்ப மனு அளித்திருப்பது உண்மை என்று தெரியவந்ததால் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு பணியில் இருப்பவர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். அதன் அடிப்படையில் வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர் திலகவதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

மேலும் செய்திகள்