சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பிரசாரத்திலும் ஈடுபடுகிறார்

சட்டமன்ற தேர்தலையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். மேலும் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட இடங்களிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Update: 2021-03-14 22:12 GMT
சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் பங்கிடப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) எடப்பாடி தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு

அதன்படி, எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் மதியம் 1 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். அதனைத்தொடர்ந்து எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அதன் விவரம் வருமாறு:-

மாலை 3 மணி - நங்க வள்ளி

மாலை 4 மணி - ஜலகண்டபுரம்

மாலை 6 மணி - எடப்பாடி நகராட்சி

இரவு 7 மணி - கொங்கணாபுரம்

இவ்வாறு அவரது தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது.

எடப்பாடியில் இன்று பிரசாரம்

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார்.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதுமே, பல்வேறு பகுதிகளுக்கு சென்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில், தனக்காக ஆதரவு திரட்ட மக்கள் மத்தியில் இன்று செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்க இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்