அரசியல் எனது தொழில் அல்ல, கடமை - மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

அரசியல் எனது தொழில் அல்ல, கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Update: 2021-03-15 11:29 GMT
கோப்புப்படம்
கோவை, 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. 

இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல், ஓசூர் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் தனது மனுவைத் தாக்கல் செய்தார். 

மனுத்தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “கோவை தெற்கு தொகுதியை முன் மாதிரியான ஒரு தொகுதியாக மாற்ற வேண்டும் என்பது என் எண்ணம். அரசியல் எங்கள் தொழில் அல்ல, அது கடமை. என்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற இந்தத் தேர்தல் வாய்ப்பு அளித்துள்ளது. பாஜகவை எதிர்கொள்ள எங்களுடைய நேர்மையை வியூகமாக வைத்துள்ளோம். எங்களிடம் உள்ள திட்டம் நேர்மை. அதை நம்பி நான் போட்டியிடுகிறேன். கோவை எனக்குப் பிடித்த ஊர். என் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். என் நண்பர்கள் அதிகமாக உள்ளனர். தெற்கு தொகுதியில் மக்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்