பெருந்துறை சட்டமன்ற தொகுதி: சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வேட்பு மனு தாக்கல்

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-18 10:55 GMT
கோப்புப்படம்

சென்னை,

அதிமுகவில் பெருந்துறை தொகுதியில் 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு வெங்கடாச்சலம். அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி அளித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்தார்.

பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் தோப்பு வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை. அதன் பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவும், 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவையும் பங்கேற்றது. அந்த அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டார்.

கடந்த 5 ஆண்டுகளாகத் தனக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என தோப்பு வெங்கடாச்சலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெருந்துறை தொகுதியில் போட்டியிட மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால், பெருந்துறை ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயகுமார் என்பவருக்கு நிற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த போது செய்த திட்டப்பணிகளை முன் வைத்து சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தோப்பு வெங்கடாசலம் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தும் கொடிவேரி திட்டப்பணிகளை நிறைவேற்ற போராடினேன். தொகுதி மக்கள் விரும்பியதால் சுயேட்சையாக போட்டியிடுகிறேன்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்