தேர்தலில் சீட் மறுப்பு 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சையாக போட்டி வேட்புமனு தாக்கல் செய்தனர்

தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சையாக களம் இறங்கி உள்ளனர். இவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Update: 2021-03-18 22:06 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இங்குள்ள

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தொடர்ச்சியாக 2 முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையுடன் உலா வந்த தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மீண்டும் 3-வது முறையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

சுயேச்சையாக மனுதாக்கல்

ஆனால் வேட்பாளர் அறிவிப்பின்போது பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டாலும் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு சீட் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னையில் கட்சி தலைமையை அணுகி முறையிட்டார்.

இந்த நிலையில், பெருந்துறை தொகுதியின் சுயேச்சை வேட்பாளராக தோப்பு என்.டி.வெங்கடாசலம் நேற்று மனுதாக்கல் செய்தார்.

பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் பெருந்துறை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை அவர் அளித்தார்.

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சந்திரசேகரன். இவருக்கு வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று அவர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்