தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? நாராயணசாமி விளக்கம்

தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-03-21 22:23 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. மத்திய அரசின் அமைப்புகள் புதுவை வந்து முகாமிட்டு ஒரு சில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது அதிகார து‌‌ஷ்பிரயோகம்.

பா.ஜ.க. தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீதும், என் மீதும் கூறி வருகிறது.

அடிமையாக்கப்படும்

பா.ஜ.க. வெற்றி பெற்றால் புதுவை மாநிலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கப்படும். அதற்கான வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. ஏற்கனவே மின்துறை, அரசு அச்சகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கையால் தான் அது தடுக்கப்பட்டுள்ளது. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும்.

தேர்தல் பணிகளை...

சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

தற்போது மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தேர்தலில் போட்டியிடுவதால் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக நான் தேர்தலில் நிற்கவில்லை.

ஏனாம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் திடீரென காங்கிரசில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அங்கு போட்டியிட வேட்பாளரை தேர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது.

எனவே அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கோலப்பள்ளி அசோக்குக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும். புதுச்சேரி தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் வர உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்