தேர்தல் பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் தே.மு.தி.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-25 00:07 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 18-ந்தேதி தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதிசுடன் விருத்தாசலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, விருத்தாசலத்தில் தங்கி, தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வேட்புமனு தாக்கலின்போது சுதீசுடன் இருந்த பிரேமலதா விஜயகாந்த், தொகுதி பொறுப்பாளர் ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

அதன்அடிப்படையில் சுகாதாரத்துறை குழுவினர் நேற்று விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட செராமிக் தொழிற்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்திடம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என கூறினர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் முடிந்ததும் தான் தங்கியுள்ள அறைக்கு வாருங்கள.் அப்போது எடுத்துக் கொள்ளலாம் என கூறினார். இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த தே.மு.தி.க.வினர், தற்போது பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் உள்ளதால், பிறகு பரிசோதனை செய்து் கொள்ளலாம் என கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

பரிசோதனை

அதன்பிறகு தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரேமலதா விஜயகாந்த் தான் தங்கியுள்ள அறைக்கு சென்றதும், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மதியம் 2.30 மணியளவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடன் இருந்த விருத்தாசலம் தொகுதி பொறுப்பாளர்கள் ராஜ், ஜானகிராமன் மற்றும் கார் டிரைவர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். 

மேலும் செய்திகள்