"அதிமுகவில் யார் வேண்டுமென்றாலும் முதலமைச்சராக முடியும்” - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

அதிமுகவில் யார் வேண்டுமென்றாலும் முதலமைச்சராக முடியும் என்றும் தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2021-03-27 08:53 GMT
நாங்குநேரி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். 

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேசராஜாவை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். 

பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, குடும்ப அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக தான்... அதிமுகவில் யார் வேண்டுமென்றாலும் முதலமைச்சராக முடியும். அதிமுகவில் உழைப்பவர்கள் உயர்ந்த இடத்திற்கு வருவார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்