தி.மு.க.வினர் பிரசாரத்தில் மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படவேண்டும்; ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க.வினர் பிரசாரம் செய்யும்போது மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படுமாறு கேட்டு கொள்கிறேன் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-03-27 11:59 GMT
சென்னை,

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா கட்சி வேட்பாளர் எழிலனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபொழுது, முதல் அமைச்சர் பழனிசாமியை  அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட அவருக்கு தடை விதிக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் வலியுறுத்தி உள்ளனர்.  அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவப்பொம்மையையும் எரித்தனர்.  அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.  இதுபற்றி தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி உறுப்பினர்கள், மக்களிடையே பிரசாரம் செய்யும்போது மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படுமாறு கேட்டு கொள்கிறேன்.

வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியம் என்று அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.  பிரசாரத்தில் ஈடுபடும்போது உணர்ச்சிவசப்பட்டு, கண்ணிய குறைவான சொற்களை வெளிப்படுத்திவிட கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்