எங்கள் நோக்கம் வளர்ச்சி; காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் நோக்கம் வாரிசு அரசியல் - பிரதமர் மோடி

எங்கள் நோக்கம் வளர்ச்சிக்கானது என்றும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் நோக்கம் வாரிசு அரசியல் என்றும் பிரதமர் மோடி பிரசாரத்தில் பேசினார்.

Update: 2021-03-30 10:04 GMT
தாராபுரம்,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகளும், த.மா.கா.வுக்கு 6 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம் ஆகிய 6 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பிரசாரத்திற்காக திருப்பூர் தாராபுரத்திற்கு வருகை தந்துள்ளார்.  அவருக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் வேல் பரிசாக அளிக்கப்பட்டது.  தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பிரதமருக்கு வேல் அளித்தார்.

இதன்பின்னர் வெற்றிவேல், வீரவேல் என்று கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.  அவர் பேசும்பொழுது, தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.  உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம் வளர்ச்சிக்கானது.  ஆனால் மறுபுறம், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் நோக்கம் வாரிசு அரசியலாக உள்ளது.  காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் தங்களது தலைவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு விசயமும் தமிழக மக்களால் கவனிக்கப்படுகிறது.  தமிழக பெண்களுக்கு ஏற்படும் அவமதிப்புகளை அவர்கள் சகித்து கொள்ளமாட்டார்கள் என காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினருக்கு கூறி கொள்ள நான் விரும்புகிறேன்.

தமிழக முதலமைச்சரின் மதிப்புக்குரிய தாயையே விமர்சித்து பேசுவதா?  பெண்களை இழிவுப்படுத்திய தி.மு.க. தலைவர்களை கட்சி தலைமை கண்டிக்கவில்லை.  அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், தமிழகத்தின் பல பெண்களை அவமரியாதை செய்வார்கள்.  கடவுள் அதனை தடுக்கட்டும் என்று பிரதமர் மோடி கூட்டத்தில் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்