திமுகவை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினார்கள் - மு.க.ஸ்டாலின்

திமுகவை அச்சுறுத்தவே எனது மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-04-04 06:35 GMT
சென்னை,

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல், அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக்கின் வீடு மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அறவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு சொந்தமான பகுதியிலும் வருமானவரி சோதனை நடைபெற்றது.

திமுக கட்சி சார்ந்தவர்களை குறிவைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட வருமானவரி சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், 
"தற்போது வெளியாகி வரும் கருத்துக்கணிப்புக்கள் ஆளுங்கட்சியிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு தக்க பதிலடி தர மக்கள் தயாராகிவிட்டனர்.

திமுகவினரை அச்சுறுத்தி, தேர்தலில் வெற்றி பெறலாம் என பாஜக முயற்சி செய்வதாகவும், வருமான வரி சோதனைகளைக் காட்டி, திமுகவை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. திமுகவை அச்சுறுத்தவே என் மகள் வீட்டில் வருமான வரி துறை சார்பில் சோதனை நடைபெற்றது. சோதனை செய்ய வந்தவர்கள் டீ, குடித்துவிட்டு, தொலைக்காட்சி பார்த்துவிட்டு பிறகு பிரியாணி சாப்பிட்டுவிட்ட சென்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற கடந்த 20 நாட்களாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறேன். இதற்காக தற்போதுவரை 12-ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளேன். இந்த பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் அடைந்த வேதனைகளை மறைக்க அதிமுக அரசு முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்