விரலில் தீட்டப்பட்ட அழியாத மை: சமூக வலைதளத்தை கலக்கிய இளம் வாக்காளர்கள் - ‘ஒரு விரல் புரட்சி’ எனும் பெயரில் டிரெண்டிங்

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்களிக்க இளம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

Update: 2021-04-06 23:56 GMT
சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்தனர். குறிப்பாக முதன் முதலில் வாக்களித்த இளம் வாக்காளர்கள் வாக்களிக்க மிகுந்த ஆர்வம் காட்டினர். இதனால் காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

ஓட்டுபோட்டுவிட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்ததுமே, தங்களது விரலில் தீட்டப்பட்ட அழியாத மையை படம் பிடித்து ‘எனது ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன்’, என்று குறிப்பிட்டு வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

சமூக வலைதளத்தில் ஒரு விரல் புரட்சி எனும் பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கி, அதை டிரெண்டிங்கும் ஆக்கினர். தங்களது நண்பர்களுக்கும் அந்த தகவலை அனுப்பினர்.

அந்த வகையில் நேற்று இளம்வாக்காளர்களின் வாட்ஸ்-அப் முகப்பு படமாக விரலில் தீட்டப்பட்ட அழியாத மை தான் இடம்பெற்று இருந்தது.

இதுகுறித்து இளம் வாக்காளர்கள் கூறுகையில், ‘முதன்முறையாக வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாக்களித்தது ஒரு புதுமையான அனுபவம். நமக்கான பிரதிநிதிகளை நாமே தேர்ந்தெடுக்கும் ஒரு நடைமுறையில் எங்களது பங்களிப்பையும் அளித்தது புதிய அனுபவமாக இருக்கிறது’ என்றனர்.

மேலும் செய்திகள்