சாம்சங் நிறுவன தலைவரிடம் 22 மணி நேரம் விசாரணை தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு சூடு பிடிக்கிறது

தென்கொரிய அதிபர் ஊழல் வழக்க்கில் சாம்சங் நிறுவன தலைவரிடம் விசாரணை தொடர்ந்து 22 மணி நேரம் நடந்தது.

Update: 2017-01-13 21:45 GMT
சியோல், 

தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையின் நெருங்கிய தோழி, சோய் சூன் சில். இவர் அதிபரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தனது தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெரும்தொகைகளை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அதிபரின் தொடர்பும் சந்தேகிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பார்க் கியுன் ஹை, 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் நிரந்தரமாக பதவியை இழப்பதா அல்லது அதிபர் பதவியில் தொடருவதா என்பது குறித்த விசாரணையை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இதற்கிடையே, 2015–ம் ஆண்டு சாம்சங் குழுமத்தின் 2 நிறுவனங்களை ஒன்றிணைத்தபோது, அந்த நடவடிக்கையில் தேசிய ஓய்வூதிய நிதியத்தின் ஆதரவை தருவதற்கு பெருமளவு பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சூடுபிடித்து வரும் நிலையில், சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீயை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து, அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து 22 மணி நேரம் நடந்தது. இந்த விசாரணையின்போது 5 டாலர் (சுமார் ரூ.340) விலையிலான மதிய உணவு பொட்டலம் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு இரவில் உறங்கவும் நேரம் ஒதுக்கித்தரப்படவில்லை. அரசு வக்கீல்களும் தூங்கவில்லை. நேற்று காலைதான் இந்த விசாரணை முடிவுக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த லீ, நிருபர்களிடம் எதுவும் பேசாமல், அங்கு தயாராக நின்ற காரில் ஏறி, அங்கிருந்து சில கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தனது நிறுவனத்தின் தலைமையகத்துக்கு சென்றார்.

மேலும் செய்திகள்