பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் ஹாங்காங்கின் புதிய தலைவராக பெண் தேர்வு

சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், ஹாங்காங்கின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

Update: 2017-03-26 20:45 GMT

ஹாங்காங்

சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் திகழ்ந்து வருகிறது. ஆனால் ஹாங்காங் விவகாரங்களில் சீனா தலையிடுவதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ஹாங்காங்கின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், கேரி லாம் (வயது 59) என்ற பெண் வெற்றி பெற்றார். இதன்மூலம் இவர், ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெயரை பெற்றார்.

ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியான இவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இவர், 1,200 சீன ஆதரவு வாக்காளர்களைக் கொண்ட கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக 777 ஓட்டுகள் கிடைத்தன. இவருக்கு அடுத்தபடியாக வந்துள்ள முன்னாள் நிதித்துறை தலைவர் ஜான் சாங் 365 ஓட்டுகளையும், ஓய்வுபெற்ற நீதிபதியான வூ குவாக் ஹிங் 21 ஓட்டுகளையும் பெற்றனர்.

இந்த தேர்தல் நடந்த அரங்கத்துக்கு வெளியே ஜனநாயக ஆதரவு குழுக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த தேர்தல்முறை வெட்கக்கேடானது என அவர்கள் சாடினர்.

வெற்றிபெற்ற பின்னர் பேசிய கேரி லாம், ‘‘எனது 5 ஆண்டு பதவிக்காலத்தில், இங்குள்ள சமூக பதற்றத்தை குறைப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன். பலதரப்பட்டவர்களின் கருத்தையும் வரவேற்கிறேன். இளைய தலைமுறையினரின் சக்தியை ஈர்ப்பேன். இங்கு அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி அனைத்தையும் நிலைநிறுத்துவேன்’’ என கூறினார்.

மேலும் செய்திகள்