ஆப்கானிஸ்தான் எல்லையில் தடுப்புவேலி அமைக்கும் பணியை பாகிஸ்தான் தொடங்கியது

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆப்கானிஸ்தான் எல்லையில் 2,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாகிஸ்தான் தடுப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கியது.

Update: 2017-03-27 15:46 GMT
இஸ்லாமாபாத், 

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அமெரிக்கா அவ்வபோது பயங்கரவாதிகளை குறிவைத்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பையும் மீறி அங்கு அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின்  நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதும், ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்படுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள உலக பாதுகாப்பு படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஹகானி நெட்வோர்க் பயங்கரவாதிகள் உதவி வருகிறார்கள், அவர்கள் பாகிஸ்தானில் இருந்துக் கொண்டு எல்லையை தாண்டி சென்று ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருநாடுகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிவருகின்றன. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் தப்பியோடி ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரம் உள்ள தங்களுடைய முகாம்களில் பதுங்கிக்கொள்கின்றனர் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது என்று ஆப்கானிஸ்தான் அரசை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. பதிலுக்கு ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டது. அமெரிக்காவும் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர முகாம்களில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையிலான நுழைவு வாயில்கள் மூடப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய நகர்வாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆப்கானிஸ்தான் எல்லையில் 2,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாகிஸ்தான் தடுப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கியது. முதல் கட்டமாக பயங்கரவாதிகள் அதிக அளவில் ஊடுருவக் கூடிய பகுதிகளில் தடுப்பு வேலி அமைக்கும் பணியை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் தடுப்பு வேலி அமைப்பது குறித்து ஆப்கானிஸ்தான் அரசு உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரம் 1893–ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் வரையறுக்கப்பட்ட துராந்த் எல்லைக் கோட்டை ஆப்கானிஸ்தான் தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்