‘இந்தியாவுடன் அமைதியான உறவைத்தான் விரும்புகிறோம்’ பாகிஸ்தான் திட்டவட்டம்

இந்தியாவுடன் அமைதியான உறவைத்தான் கடைப்பிடிக்க விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறி உள்ளது.

Update: 2017-03-28 22:30 GMT
வாஷிங்டன்,

பாகிஸ்தானில் உள்ள ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத குழு மீது அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பது அமெரிக்காவின் கருத்தாக இருந்து வந்துள்ளது. அந்த குழு மீது பாகிஸ்தான் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த குழுவை அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக பாகிஸ்தான் 2015–ம் ஆண்டு தடை செய்துள்ளது. இருந்தபோதும் அதன் செயல்பாடுகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்துவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

எதிரானவர்கள்

இந்த நிலையில், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் புதிய தூதராக பதவி ஏற்றுள்ள அய்ஜாஸ் அகமது சவுத்ரி, அங்கு ஒரு டெலிவி‌ஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘ஹக்கானி நெட்வொர்க் குழு, மனித உயிர்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. அத்தகைய சக்திகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு நாங்கள் (பாகிஸ்தான்) எதிரானவர்கள்’’ என உறுதிபடகூறினார்.

இந்திய உறவு

இந்தியாவுடனான பாகிஸ்தான் உறவு பற்றியும் அய்ஜாஸ் அகமது சவுத்ரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, ‘‘இந்தியாவுடன் பாகிஸ்தான் அமைதியான உறவைக் கடைப்பிடிக்கத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில், பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்த உறவு அமைய வேண்டும் என்பதுதான் பாகிஸ்தானின் நிலைப்பாடு’’ என்று உறுதிபட கூறினார்.

மேலும், ‘‘இந்திய–பாகிஸ்தான் உறவு மேம்படும்வகையில் பேச்சுவார்த்தை நடத்துகிறபோதெல்லாம், பயங்கரவாத நடவடிக்கைகள் அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகின்றன. இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திவிடுகிறபோது, பயங்கரவாதிகள் ஊக்கம் அடைகின்றனர்’’ என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு செய்தி

அத்துடன், ‘‘அமைதியான சூழலில் இந்திய–பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்பதுதான் அந்த நாட்டுக்கு எங்களது செய்தியாக அமைந்துள்ளது’’ என்றும் கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை, பதன்கோட் விமானப்படைதளத்தை தகர்க்கும் நோக்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது பாகிஸ்தான் தரப்பில் இந்திய உறவு குறித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும் செய்திகள்