’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் இங்கிலாந்து அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து சோதனை

லண்டன் நீதிமன்ற உத்தரவையடுத்து ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் இங்கிலாந்து அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். #CambridgeAnalytica

Update: 2018-03-24 04:56 GMT
லண்டன்,

பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியது. அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மோசடி செயலில் ஈடுபட்டதாக தெரியவந்து உள்ளது. இதுபோன்று பிற முக்கிய தேர்தல்களிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தன்னுடைய கைவரிசையை காட்டி உள்ளது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவை தன்னுடைய தளத்தில் இருந்து பேஸ்புக் நீக்கிவிட்டது.

மேலும் சட்டவிரோதமாக தகவல் திருடிய  ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ வழக்கை விசாரித்து வந்த லண்டன் தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹம், நிறுவனத்தின் அலுவலகத்தை முழு சோதனையிட லண்டன் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். 

இதற்கு ஒப்புதல் அளித்த லண்டன் நீதிமன்றம், தகவல் திருட்டு தொடர்பான முழு விபரத்தையும் மார்ச் 27 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து தகவல் ஆணையர் எலிசபெத் டென்ஹம் தலைமையில் 18 அமலாக்கப்பிரிவினர் ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் நள்ளிரவு 1.30 மணியிலிருந்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து டென்ஹம் தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில், ”கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அலுவலகத்தை சோதனையிட கோரிய நீதிமன்ற உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது. மக்களின் தகவல்களை திருடி அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்ட இந்த வழக்கில் அலுவலக சோதனை என்பது மிகப்பெரிய விசாரணையில் ஒரு பகுதியாகும். நீங்கள் எதிர்பார்த்தது போல, இந்த வழக்கிற்கு தேவையான அனைத்து சாட்சிகளையும், மதிப்பீடுகளையும் ஒன்று திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்