பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது - மோடி விமர்சனம்; பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு கரம்

லண்டனில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என விமர்சனம் செய்தார். #China #Pakistan

Update: 2018-04-20 09:41 GMT


பெய்ஜிங்,


 லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது “எங்களுக்கு அமைதியின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்பவர்களை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் சரியான பதிலடியை கொடுப்போம். அவர்கள் புரிந்துக்கொள்ளும் மொழியில் பதிலடி இருக்கும். பயங்கரவாதத்தை ஏற்க முடியாது.” என்றார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என இந்தியா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விமர்சனத்தை முன்வைக்கும் போதும், நடவடிக்கையில் இறங்கும் போதும் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வருவது தொடர்ந்து வருகிறது.

இப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிவரும் பாகிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என சீனா கூறிஉள்ளது. 

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என்ற பிரதமர் மோடியின் பேச்சு தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சங்யிங் பதிலளித்து பேசுகையில், “பயங்கரவாதம் அனைத்து தரப்பிற்கும் எதிரியாகும். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட சர்வதேச சமூதாயம் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் ஆதரவை தெரிவிக்க வேண்டும், பயக்கரவாத விவகாரத்தில் பயனுள்ள ஒத்துழைப்பைக் கொடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
 
பாகிஸ்தானை பாதுகாக்கும் விதமாக சர்வதேச அரங்கில் அந்நாட்டுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிகைக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்