இந்திய என்ஜினீயர் கொலை; அமெரிக்கருக்கு வாழ்நாள் சிறை

இனவெறியில் இந்திய என்ஜினீயரை கொலை செய்த அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2018-05-05 22:00 GMT
வாஷிங்டன்,

இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சி போட்லா (வயது 33). ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர், அங்குள்ள ஜவகர்லால் நேரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து பொறியியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்கா சென்று டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் படித்து மின்னியல், மின்னணுவியலில் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜி.பி.எஸ். சாதன தயாரிப்பில் பிரசித்தி பெற்ற கார்மின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, உயர் பொறுப்பு வகித்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி இரவு கன்சாஸ் மாகாணம், ஒலாத்தே நகரில் உள்ள மது விடுதிக்கு தனது நண்பருடன் சென்று இருந்தார்.

அங்கு அவரை அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய ஆதம் புரிண்டன் (52) பார்த்தார். இந்தியரான சீனிவாசை கண்ட உடன் ஆதம் புரிண்டனுக்கு இனவெறி ஏற்பட்டது. இதில் தகராறு ஏற்பட்டது. வெளியே சென்ற ஆதம் புரிண்டன், கையில் துப்பாக்கியுடன் திரும்பி வந்து சீனிவாஸ் குச்சிபோட்லாவைப் பார்த்து, “என் நாட்டை விட்டு வெளியேறு” என கத்தினார். அத்துடன் சரமாரியாக சுடவும் தொடங்கினார்.

இதில் சீனிவாஸ் குச்சி போட்லா குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவருடன் சென்று இருந்த அவரது நண்பர் அலோக் மதசானியும், மற்றொருவரும் படுகாயம் அடைந்தனர்.

இனவெறியில் சீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் இந்தியர்களை மட்டும் இன்றி, இந்திய மக்களிடமும் பெரும் வேதனையையும், துக்கத்தையையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கன்சாஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதம் புரிண்டனை கைது செய்தனர்.

அவர் மீது கன்சாஸ் பெடரல் கோர்ட்டில், சீனிவாஸ் குச்சி போட்லாவை கொலை செய்ததுடன், அலோக் மதசானியையும், மற்றொருவரையும் கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதம் புரிண்டன் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதில் அவருக்கும் கோர்ட்டுக்கும் இடையே குற்ற ஒப்புதல் உடன்படிக்கை எட்டப்பட்டது.

இந்த நிலையில் கன்சாஸ் பெடரல் கோர்ட்டு, ஆதம் புரிண்டன் குற்றவாளி என கண்டு அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது. இதனால் அவர் தன் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அவர் 100 வயது கடக்கிற வரையிலும் பரோலிலும் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பை சீனிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி சுனயானா துமாலா வரவேற்று உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்து உள்ள அறிக்கையில், “ என் கணவர் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், அது என் சீனுவாசை திரும்ப கொண்டு வந்து விடாது. ஆனால், வெறுப்புணர்வு என்பது ஒருபோதும் ஏற்கத்தக்கது அல்ல என்ற வலுவான செய்தியை இது விடுக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்