பாகிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை 3 பயங்கரவாதிகள் பலி ராணுவ அதிகாரி ஒருவரும் சாவு

பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ ஜாங்வி பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் பலுசிஸ்தான் பிராந்திய தலைவர் சல்மான் பாதனி.

Update: 2018-05-17 22:30 GMT

குவெட்டா,

சல்மான் பாதனியும், அவரது கூட்டாளிகளும், பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவின் புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன.

அவற்றின் பேரில் ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். அப்போது ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

ராணுவத்தினரும் தங்கள் துப்பாக்கியால் அவர்களுக்கு தக்க பதிலடி தந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் முடிவில் சல்மான் பாதனியும், அவரது கூட்டாளிகளும் தற்கொலைப்படை பயங்கரவாதிகளுமான 2 பேரும் கொல்லப்பட்டனர்.

மேலும் பாகிஸ்தான் ராணுவ உளவு அதிகாரி ஒருவரும் பலியானார்.

கொல்லப்பட்டு உள்ள சல்மான் பாதனி, ஹசாரா சமூகத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோரையும், போலீசாரையும் கொன்று குவித்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என ராணுவம் விடுத்து உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்களுக்கு எதிராக நடத்தப்படுகிற கொலைவெறி தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, ஹசாரா சமூகத்தினர் குவெட்டாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்