ஸ்டெர்லைட்டிற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting #sterlitekillsthoothukudi

Update: 2018-05-24 09:58 GMT
லண்டன்,

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக பிற இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

 இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய 12 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஸ்டெர்லைட், இந்திய அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்து மீதான அழுத்தத்தை அதிகரிக்க செய்து உள்ளது. இந்நிலையில் இவ்வார இறுதியில் லண்டனில் இந்திய தூதரகம் முன்னதாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

ஸ்டெர்லைட் நிறுவனம் லண்டனை மையமாக கொண்டு செயல்படுகிறது, அதற்கு எதிரான போராட்டங்களும் அதன் மையமாகவே நடைபெறுகிறது. இவ்வார இறுதியில் நடைபெற உள்ள போராட்டத்தில் லண்டன்வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளை சேர்ந்த சுகாதார ஆர்வலர்கள், பிற நாட்டவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலநதுக்கொள்ள உள்ளது. பிரிட்டனில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் குழு, உள்ளூர் அமைப்புகளுடன் சனிக்கிழமை முன்னெடுக்கிறது.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு போராட்டக்குழு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது, பிரிட்டன் அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இங்கிலாந்து வாழ் தமிழர்கள் இப்போராட்டத்தில் கலந்துக்கொள்கிறார்கள்.

Foil Vedanta குழுவை சேர்ந்த மரியம் ரோஸ் பேசுகையில், “இந்த படுகொலையில் இந்திய அரசும் இணைந்து உள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இச்சம்பவத்திற்கு முழு பொறுப்பான பிரிட்டிஷ் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணக்கம் காட்டுவதற்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்,” என கூறிஉள்ளார். லண்டன் வாழ் தமிழர் கமலகண்ணன் பேசுகையில், “காயம் அடைந்த போராட்டக்காரர்களுக்கான சிகிச்சை மற்றும் மனித உரிமைகள் மீறல் பற்றி மிகவும் கவலை கொண்டுள்ளோம்,” என கூறிஉள்ளார். போராட்டக்காரர்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிக்க விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்டு உள்ளார். தூத்துக்குடியில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வெளியானதுமே லண்டனில் அனில் அகர்வாலுக்கு எதிராக போராட்டம் நடைபெற தொடங்கியது.

மேலும் செய்திகள்