அமெரிக்க ஜனாதிபதியை கிண்டலடித்த ஆசிரியை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அனுப்பிய கடிதத்தில் இலக்கணப் பிழைகள் அதிகம் இருப்பதை ஆசிரியை ஒருவர் சுட்டிக்காட்டி கிண்டல் அடித் திருக்கிறார்.

Update: 2018-06-09 10:25 GMT
அட்லாண்டாவைச் சேர்ந்த அந்த ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், புளோரிடா பார்க்லேண்ட் பள்ளியில் 17 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் களின் குடும்பங்களைச் சந்தித்து டிரம்ப் ஆறுதல் கூற வேண்டும் என்று கோரியிருந்தார்.

மேலும், அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணையை முடுக்கிவிட வேண்டும் எனவும் அந்த ஆசிரியை வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு, டிரம்ப் தரப்பில் இருந்து பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில், துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை விளக்கங்கள் இருந்துள்ளன. ஆனால் மாணவர்கள் இறந்தது குறித்து எவ்வித உருக்கமான வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கவில்லை.

அத்துடன் அக்கடிதத்தில் அனேக இலக்கணப் பிழைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அக்கடிதத்தைப் படித்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்து, பிழைகளைத் திருத்தம் செய்து முகநூலில் வெளியிட்டார். மேலும் அக்கடிதத்தை டிரம்புக்கும் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அந்த ஆசிரியை கூறுகையில், எத்தனையோ அரசியல்வாதிகளுக்கு நான் இதற்கு முன் இதுபோன்ற கடிதங்களை அனுப்பியிருக்கிறேன்.

அதில் தென் கரோலினாவின் கவர்னரான விண்ட்சே ஆபிரஹாம் எனக்கு அனுப்பியிருந்த பதில் கடிதங்களின் இலக்கண அழகைப் பார்த்தபோது, அவரைவிட அவரது கடிதங்களில் அதிக மதிப்பு உண்டானது.

அந்த அளவுக்கு மொழி மீது மிகுந்த ஆளுமைத் திறன் கொண்ட தலைவர்கள் எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன.

ஆனாலும் இந்த அளவுக்கு மோசமான இலக்கணப் பிழைகளுடன் கூடிய கடிதத்தை எந்த அரசியல்வாதி யிடம் இருந்தும் நான் இதுவரை பெற்றதில்லை. டிரம்பின் ஆங்கில இலக்கண அறிவு மிக மிக மோசம் என விளாசியிருக்கிறார்.

உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் சிறு தவறு செய்தாலும் ‘பளிச்’சென்று வெளிப்பட்டு விடுகிறது! 

மேலும் செய்திகள்