அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவன தலைமை நிதி அதிகாரியாகிறார் சென்னை பெண்

சென்னை பல்கலை கழகத்தில் படித்த இந்திய அமெரிக்க பெண் அமெரிக்காவின் மிக பெரும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக உள்ளார்.

Update: 2018-06-14 07:34 GMT

ஹூஸ்டன்,

சென்னையில் பிறந்தவர் திவ்யா சூர்யதேவரா (வயது 39).  சென்னை பல்கலை கழகத்தில் வர்த்தக படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை முடித்து உள்ளார்.

அவர் தனது 22வது வயதில் ஹார்வர்டு பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார்.  பின் 2005ம் ஆண்டில் தனது 25வது வயதில் டெட்ராய்ட் நகரில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவரும் மேரி பேர்ரா (வயது 56) என்ற பெண் ஆவார்.  கடந்த 2014ம் ஆண்டில் இருந்து அவர் இந்த பதவியில் இருக்கிறார்.  உலகில் வேறு எந்தவொரு பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்திலும் பெண் ஒருவர் தலைமை செயல் அதிகாரியாக இருக்கவில்லை.

இதேபோன்று தலைமை நிதி அதிகாரியாகவும் ஒரு பெண் இருந்ததில்லை.  கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக திவ்யா இருந்து வருகிறார்.  இந்நிலையில், வருகிற செப்டம்பர் 1ந்தேதி தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்து சக் ஸ்டீவன்ஸ் ஓய்வு பெறுகிறார்.  இதனை தொடர்ந்து திவ்யா அந்த பதவியின் பொறுப்பினை வகிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்