உலகை உலுக்கிய சிறுமியின் கண்ணீர் விடும் புகைப்படம் எப்படி இருக்கிறார்?

டைம் பத்திரிகையில் அட்டைபடமாக வெளியாகிய சிறுமி யனிலாவும் தாயாரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். #Trump

Update: 2018-06-22 11:55 GMT
வாஷிங்டன்

தனது தாயை போலீசார் சோதனையிடும்போது மிரண்டு, முகத்தில் பயமும் கோபமும் கொந்தளிக்க கண்ணீருடன் கதறியழும் ஒரு குழந்தையின் புகைப்படம் வெளியாகி அமெரிக்காவின் பொது ஜனம் முதல் அமெரிக்க அதிபரின் மகள் வரை அனைவரையும் அதிர வைத்தது. அந்தக் குழந்தை ஹோண்டூராசைச் சேர்ந்த டெனிஸ் ஜாவியர் வார்லா ஹெர்னாண்டஸ் (32) என்பவரின் மகள், அவளது பெயர் யனிலா (2).

எல்லை தாண்டி சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து அவர்களது குழந்தைகளைப் பிரிக்கும் டிரம்பின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளில் யனிலாவும் ஒருவர்.அவளது தாயான சாண்ட்ரா  தனது கணவரின் விருப்பத்திற்கு விரோதமாக இன்னும் கொஞ்சம் வசதியாக வாழலாம் என்னும் எண்ணத்தில் சட்ட விரோதமாக ஏஜெண்ட் ஒருவருக்கு பணம் கொடுத்து அமெரிக்காவிற்குள் நுழையும்போது போலீசாரிடம் சிக்கினார்.

பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு மிருகங்கள்போல இரும்புக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் யனிலா கண்ணீர் விட்டழும் காட்சி டைம் பத்திரிகையில் அட்டைப் படமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பல நாடுகளிலும், ஏன் தனது குடும்பத்திலுமே பயங்கர எதிர்ப்பு தோன்றுவதைக் கண்ட டிரம்ப் வழக்கம்போல தனது நடவடிகையிலிருந்து பின்வாங்கினார்.இந்நிலையில் யனிலாவி தந்தையான டெனிஸ் ஜாவியர்  , தற்போது தனது மனைவியும் மகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ள செய்தி அந்தக் குழந்தைக்காக மனம் வருந்திய பல நல்ல உள்ளங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தனது மகள் கண்ணீர் விட்டுக் கதறும் புகைப்படத்தை கண்டு தானும் கதறி விட்டதாகக் கூறும் டெனிஸ் ஜாவியர்  , அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது நிற்கப்போவதில்லை என்கிறார். அவர்கள் அமெரிக்காவைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவர் எழுப்பினாலும் மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதும் போதை பொருட்கள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதும் நிற்கப்போவதில்லை என்கிறார்.

மேலும் செய்திகள்