சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை விலகியது

உலகிலேயே சவுதி அரேபியாவில் மட்டும்தான் பெண்கள் வாகனம் ஓட்ட தடை இருந்து வந்தது.

Update: 2018-06-24 21:30 GMT
ரியாத், 

உலகிலேயே சவுதி அரேபியாவில் மட்டும்தான் பெண்கள் வாகனம் ஓட்ட தடை இருந்து வந்தது. அங்கு ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. சாலைகளில் எந்தப் பெண்ணாவது வாகனம் ஓட்டினால், அவர்களை கைது செய்து அபராதம் விதிக்கும் நிலை இருந்ததால், பெண்கள் வெளியே செல்ல வேண்டுமானால், வாகனங்கள் ஓட்டுவதற்கு ஓட்டுனர்களை அமர்த்த வேண்டிய கட்டாயம் நிலவியது.

இந்த நிலையில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு பிறப்பித்து இருந்த தடையை விலக்கி, அந்த நாட்டின் மன்னர் சல்மான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26–ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு ஜூன் மாதம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் பெண்களுக்கு அங்கு கடந்த மாதம் முதல் ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வாகனங்கள் ஓட்டுபவதற்கான தடை விலகியது. இதையடுத்து சாலைகளில் பெண்கள் வாகனங்களை ஓட்டிக்கொண்டு உற்சாகத்தில் மிதந்தனர்.

பெண் தொழில் அதிபரான சமா அல்கோசைபி என்பவர் இதுபற்றி கூறும்போது, ‘‘நல்லதொரு எதிர்காலத்துக்கான விடியலுக்கு நாங்கள் சாட்சி ஆக இருக்கிறோம். ஒரு தொழில் அதிபர் என்ற முறையில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு நான் மனப்பூர்வ நன்றியை தெரிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

லினா அல்மாயினா என்ற மற்றொரு பெண், ‘‘இது விடுதலை கிடைத்த உணர்வை தந்து உள்ளது’’ என்று கூறினார்.

ஜெட்டாவில் உணவு வல்லுனரான சாரா அல்வாசியா என்ற பெண், ‘‘நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டுனர் உரிமம் பெற்றேன். சொந்த நகரத்தில் வாகனம் ஓட்டுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை’’ என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்