குல்பூ‌ஷண் ஜாதவ் வழக்கு சர்வதேச கோர்ட்டில் 17–ந்தேதி பாகிஸ்தான் பதில் தாக்கல்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூ‌ஷண் ஜாதவ் வழக்கில் 17–ந்தேதி பாகிஸ்தான் பதில் தாக்கல் செய்கிறது.

Update: 2018-07-12 15:15 GMT

இஸ்லாமாபாத், 

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ்(வயது 47). இவர், ஈரான் நாட்டில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தார் எனவும் அங்கு உளவு பார்த்ததுடன், பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்டார் என்றும் கூறி பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது. இது தொடர்பாக ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்தி அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கில் இந்தியா தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 17–ந்தேதி எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய தரப்பு வாதத்துக்கு பதில் அளித்து பாகிஸ்தான் தரப்பு தனது பதிலை 17–ந்தேதி தாக்கல் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் நசிருல் முல்க்கை மூத்த வக்கீல் காவர் குரேஷி சந்தித்தார். அப்போது வழக்கு குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல் கலித் ஜாவத் கான் மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்