சிறை தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சிறை தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷெரீப் இஸ்லமாபாத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை இன்று கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. #Avenfieldverdict

Update: 2018-07-17 02:42 GMT
இஸ்லமாபாத்,

பிரதமராக பதவி வகித்தபோது நவாஸ் ஷெரீப் தனது குடும்பத்தினர் பெயரில் லண்டனில் அவென்பீல்டு சொகுசு வீடுகளை ஊழல் செய்த பணத்தில் வாங்கியதாக இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மகள் மரியத்துக்கும், மருமகன் கேப்டன் சப்தாருக்கும் பெரும் பங்கு உண்டு என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்து வந்த இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டு, கடந்த 6-ந் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு மொத்தம் 11 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 மில்லியன் டாலர்(ரூ.65 கோடி) அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. மகள் மரியத்துக்கு 8 வருட சிறைத்தண்டனையும், 2.6 மில்லியன் அபராதமும்(ரூ.17 கோடி) விதித்தது. சப்தாருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டது. அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது நவாஸ் ஷெரீப்பும்(வயது 68), அவருடைய மகள் மரியமும்(44) லாகூர் நகரில் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்த சப்தார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது பொறுப்புடைமை கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மூவரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். 

இந்த மனுவை இஸ்லமபாத் ஐகோர்ட் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. இது தவிர, பனாமா ஆவண ஊழல் தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடைபெற்று வரும் மற்ற இரு வழக்கு விசாரணைகளையும் வேறு ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்