உலகைச்சுற்றி

சீன எல்லையையொட்டி, ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி உள்ளது.

Update: 2018-09-12 23:15 GMT

* இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலையும், அவரது மகளையும் நரம்பு மண்டலத்தை முடக்கி விடுகிற நச்சு தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சித்த 2 பேர், கிரிமினல்கள் அல்ல, அவர்கள் சாதாரண குடிமக்கள்தான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த தகவலை ரஷிய அதிபர் புதின் தெரிவித்து உள்ளார்.

* அமெரிக்காவில் மையம் கொண்டு உள்ள ‘புளோரன்ஸ்’ புயல், மேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (வியாழக்கிழமை) வடக்கு அல்லது தெற்கு கரோலினாவை தாக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த புயல் மிகவும் ஆபத்தானது என கணிக்கப்பட்டு உள்ளது. 10-15 அங்குல அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் உள்ளூர் கிளர்ச்சியாளர்களின் தளபதிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் 22 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் 68 பேர் பலியானதாக நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

* சீன எல்லையையொட்டி, ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி உள்ளது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னர் இதுதான் மிகப்பெரிய போர் பயிற்சி என கூறப்படுகிறது. இதில் 3 லட்சம் வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

* வியட்நாம் தலைநகர் ஹனோயில் வாழும் பொதுமக்கள், நாய் இறைச்சியை சாப்பிட வேண்டாம், அது நகரின் புகழை சீர்குலைப்பதுடன், வெறிநாய்க்கடி போன்ற பாதிப்புக்கு வழிநடத்தும் என அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆதரவு தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்